இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகின்றது. எனவே, சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத் திட்டத்தை எமது அரசு முன்வைக்கும்.” – என்றும் அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது.
எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது.
இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.
நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.
புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது.” – என்றார்.