தொடரும் கன மழையினால் அதிகரிக்கும் பாதிப்புகள். 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவு.

நான்கு நாட்களாகப்  பெய்து வரும் தொடர் கன மழையினால் மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்

இதனைத் தெரிவித்துள்ளார்,

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்’

“மன்னார் மாவட்டத்தில் நான்கு

நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையானது இப்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் வலுவடைந்துள்ளது.

தற்போதைய நிலமையின்படி 13860 குடும்பங்களைச் சேர்ந்த 48195 பேர் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதுள்ள காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

கால போகத்திற்காக இதுவரை பயிர் செய்கை பண்ணப்பட்ட 9709 ஹெக்ரர் நிலத்திலே 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளது.

நீடித்து வரும் மழையின் காரணமாக கல்விப்  பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் நிலவாதிருக்கும் முகமாக அவர்களைப் பரீட்சை மண்டபங்களுக்கும் அழைத்துச் செல்லும் பணிகளைப்  பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் முக்கியமாகக் காணப்படும் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமும் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. தற்பொழுது 11 அடியாக

உயர்ந்துள்ளது.

இதனால் மன்னாரில் வெள்ள நிலமை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகிவிடும். இதன் பாதிப்பை தடுக்கும் முகமாக, இந்த வெள்ளத்தை கடலுக்குள் வெளியேற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI