மன்னாரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிய, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மாற்றும் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் இன்றையதினம் (24.11) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்திருந்தனர்.
நீரில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள் மற்றும் கிராமங்களைப் பார்வையிட்டதோடு,நலன்புரி முகாமில் தங்கவைக்கப் பட்டிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில், மன்னார் பிரதேச செயலாளர், M. பிரதீப், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் K. திலீபன்,உதவி மாவட்டச் செயலாளர் B. டிலிஷன் பயஸ்,பொலிஸ் அதிகாரி, வைத்திய அதிகாரியுட்பட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்நிலங்களில் அமைந்துள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ள நிலையில்,
இரண்டாயிரத்து எழுபத்துநான்கு(2074) குடும்பங்களைச் சேர்ந்த, ஏழாயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு (7916)பேர் இதுவரை பாதிக்கப் பட்டு, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.