தம்மைக் கைது செய்து துன்புறுத்தல் மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பிரகாரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் கீழ் இது தொடர்பில் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
இதன்படி, வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்களை பதிவு செய்யப்படவுள்ளன.
பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த கித்சிறி ஜயலத்தின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினால் 2019 மே 25 ஆம் திகதி குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் நேற்று முன்தினமே பெறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. .
வைத்தியரைக் கைது செய்ததற்கு அடிப்படையாகக் கூறப்படும் அறிக்கையில் 10 ஆதாரங்கள் இருந்ததாகவும், அவைகள் ஒன்பதும் முந்தைய நாள் தயாரிக்கப்பட்டவை என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சகாப்தீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் மூலம் தாய்மார்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியதாக சில தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவரை இது தொடர்பான வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான விசாரணைகளின் பகுதிகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் எழுத்துமூலம் அறிவித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.