பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
நாளை மு.ப 9.55க்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.
முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதுடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை காணப்படுவதால் வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்படுவார்.
பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கு தெரிவுகள் இடம்பெறும்.
முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும்.
இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய மு.ப 11.30க்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்திற்கு முன்வைக்கவுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார்.