பாராளுமன்றத் தேர்தலில் யாழ்., கிளிநொச்சி மாவட்டத்தில் 5, 93, 187 பேர் வாக்களிக்கத் தகுதி – தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் தெரிவிப்பு.
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8 ஆயிரத்து 570 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் ஆயிரத்து 634 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கடமைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நெடுந்தீவுப் பிரதேசத்துக்கான வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்வது மற்றும் வாக்குப் பெட்டிகளை மீள எடுத்து வருவது தொடர்பான பயண ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தீவக பகுதிகளுக்கான தரை வழிப் போக்குவரத்து ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பேருந்துகளும் 129 தனியார் பேருந்துகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
காலை 07: 00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாலை 04: 00 மணிக்கு நிறைவுறுத்தப்படும்.
இதுவரை யாழ். மாவட்டத்தில் ஒரு வன்முறை சம்பவமும் 62 சட்ட மீறல்களும் பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, நீதியானதும் நியாயமான தேர்தலை நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.