இரத்தினபுரி மொரகஹயத்த பகுதியில் பத்து அரிய வகை ரத் தோதாலு மலர்களை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அவசர சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, இம் மலர்கள் பெரும்பாலும் புத்த பெருமானுக்குக் காணிக்கையாக பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த நவம்பர் 4 ஆம் திகதி இரத் தோதாலு மரங்களை சேதப்படுத்தியதற்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
‘லோக்சோகொக்கஸ் ரூபிகோலா’ எனும் அறிவியல் பெயர் கொண்ட இத் தாவரம் ஒரு வகை பனை மற்றும் லோக்சோகொக்கஸ் இனத்தைச் சேர்ந்தது.
இலங்கையில் மட்டுமே காணப்படும் இத் தாவரம் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளது.
வாழ்விட இழப்பின் காரணமாக இத் தாவரங்கள் வளரும் வீதத்தில் சிக்கல்நிலை காணப்படுகிறது.
இத் தாவரங்கள் அழிந்து வரும் நிலையை அங்கீகரித்து, 2020 ஆம் ஆண்டில் உலக வனவிலங்கு தினத்தன்று ரத் தோதாலு மலர்கள் அடங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தபால்தலை பணியகத்தால் இது வெளியிடப்பட்டது.
அழிவின் விழிம்பில் இருக்கும் இவ் அரிய வகை தாவரத்தை பாதுகாக்க வனவிலங்கு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் எவரேனும் ரத் தோதலு தாவரத்துக்கு சேதம் விளைவிப்பது குறித்து தகவல் தெரிந்தால் 1992 என்ற வனவிலங்கு திணைக்கள அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.