தமிழரசுக் கட்சிக்கு வடக்கு மாகாணத்தில் மக்கள் 10 ஆசனங்களை வழங்க வேண்டும் – வேட்பாளர் பிரகாஷ்

இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டி அடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது; வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப் படி படித்த – ஆளுமையுடைய – இளைஞர்களை இந்த முறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துள்ளது.

ஆகவே, மக்களின் எதிர்பார்ப்பை கட்சி நிறைவு செய்ததால் தமிழ் மக்கள் ஓரணியாகத் திரண்டு யாழ்.,  கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் வன்னி தேர்தல் மாவட்டம் இரண்டிலும் சேர்த்து 10 ஆசனங்களைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஒரு தேசமாக நாம் தமிழ்த் தேசியத்தைக் கோரி நிற்கின்றோம் என்பதை சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஒற்றுமையாக – ஓரணியாக – இடித்துரைக்க வேண்டும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தி.பிரகாஷ்.

சுன்னாகத்தில் பொதுமக்களைச் சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு –

தமிழரசுக் கட்சி இளைஞர், யுவதிகளுக்கு நாடாளுமன்ற ஆசனம் வழங்குவதில்லை. இருந்த அதே பழையவர்கள்தான் இளைஞர்களுக்கு வழிவிடாமல் தொடர்ந்தும் நாடாளுமன்றில் இருக்கிறார்கள். இளம் தலைமைத்துவமுடைய ஆற்றலாளர்கள், தலைமைத்துவ பண்புகளைக் கட்சி வளர்ப்பதில்லை என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இருந்ததை நாம் நன்கு அறிவோம். அதில் உண்மையும் இருந்தமையால் நாம் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை. கட்சியில் உறுப்பினராக இருந்துகொண்டு பொதுவெளியில் அவற்றை விமர்சிப்பது நாகரிகமாகாது.

அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டதால் அதில் கொலைகாறர்களும் கொள்ளையர்களும் விரும்பியோ விரும்பாமலோ நிரவியிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் புதியவர்களுக்கு வழிவிடவில்லை. ஆரம்பத்தில் ஓர் ஆசனம் கேட்டு வந்தவர்கள் காலப்போக்கில் மாவட்டத்தின் ஆசனம் குறைகின்றபோது இவர்கள் ஆசன எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியமையே அதற்குக் காரணம். இப்பவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி, திரும்பவும் தாமே வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்.

இவர்கள், தாம் தமிழரசுக் கட்சியை விட்டுச் சென்றமைக்குக் காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை. அதனால்தான் வெளியேறினோம் என்பார்கள். ஆனால், மக்கள் கட்சி நிலைவரத்தை பார்த்தீர்களானால் தெரியும் அங்கு ஜனநாயகம் இருந்தமையால்தான் இவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்பது புலப்படும்.

புளொட் தலைவர் 2013 இல் மாகாணசபைத் தேர்தலுக்கு இரு ஆசனம் கேட்டார். தமிழரசுக் கட்சித் தலைமை வழங்கியது. இளைஞரான ஒருவரை நிறுத்தினார். நாமும் அதை வரவேற்றோம். பின் 2015 இல் தனக்கு நாடாளுமன்ற ஆசனம் கேட்டார். அதையும் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுத்தது.

பின் 2019 இல் இரண்டு நாடாளுமன்ற ஆசனம் கேட்டார் அதற்கும் 7 ஆசனமாகக் குறைக்கப்பட்ட பின்னரும் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுத்தது. ரெலோவும் தமது கட்சி சார்பில் ஓர் இளைஞரை நிறுத்தப்போகிறோம் என்று ஆசனம் கேட்டது. தமிழரசுக் கட்சி அதற்கும் விட்டுக்கொடுத்தது.

இவ்வாறு கூட்டமைப்பின் தலைமையாக இருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் விட்டுக்கொடுத்துக்கொண்டே சென்றமையால் – அவர்கள் தமது கட்சி அரசியலை கனகச்சிதமாக வளர்த்துக்கொண்டே சென்றமையால் – தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சிமீது விசனம் ஏற்படத் தொடங்கியது. 2018 உள்ளூhட்சி மன்றத் தேர்தலில் அடிபட்டு ஆசனங்களைப் பெற்று, தலைமைத்துவமற்ற அவர்கள் சபைநடத்திய விதம் தொடர்பில் மக்கள் வெறுப்படைந்தனர். 2023 சபை பங்கீட்டை மேலும் மேலும் கேட்டதன் காரணமாக சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் பொறுமையிழந்து நாம் தனித்தனிக் கட்சிகளாகப் போட்டியிடுவோம். வென்றதன் பிற்பாடு கூட்டமைப்பாக சேர்ந்தியங்குவோம். – என்றார்கள். இதற்கு உடன்படாமையால் அவர்கள் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியில் ஜனநாயம் இல்லை என்கிறார்கள். இதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சி, கடந்த தேர்தலில் தோற்றவர்களுக்கு ஆசனம் வழங்குவதில்லை என்ற முடிவை எடுத்தது. தலைவர் மாவை ஐயாகூட அதற்கு சம்மதித்தார்.

அத்தோடு புதிதாக மக்கள் விருப்பத்திற்கமைய இளைஞர், யுவதிகளை நிறுத்துவது எனவும் கட்சி முடிவெடுத்தது. இதனால் விரக்தியுற்ற சிலர் பிறிம்பாக சென்று புது சுயேச்சைக் குழுவை உருவாக்கினர். ஆர்னோல்ட் மட்டும் யாழ்.தேர்தல் தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்டவர். அவர் இளைஞர் என்பதால் அவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் கட்சி வழங்கியது. சுமந்திரன், சிறிதரன், இளங்கோவனைத் தவிர அனைவரும் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். ஒட்டு மொத்த வேட்பாளர்களும் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆகவே, நீங்கள் எதிர்பார்த்தமை போன்று இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே மக்கள் மத்தியில் அறியப்பட்ட கட்சி தமிழரசுக் கட்சிதான்.

அரச இயந்திரத்தால் தமிழர் ஒற்றுமையைக் குலைப்பதற்காக புதுப்புது கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் என்று இறக்கப்பட்டிருக்கலாம். அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து எமது மக்கள் அதளை முறியடித்து, ஒற்றுமையாக – ஓரணியாக தமிழ் தேசமாக எமது தேசியத்துக்குரிய உரிமையை தீர்மாணிக்கப்போவது உங்கள் வாக்குகள்தான்.

ஆகவே, அதனைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கி வடக்கு மாகாணத்தில் 10 ஆசனங்களைப் பெற்று அதனை நிரூபித்து தமிழர்கள் தன்மானமுள்ளவர்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றுவோம்- என்றார்.

Recommended For You

About the Author: S.R.KARAN