தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் வன்புணர்வுகளுக்கும் அங்கஜன் இராமநாதன் பதில் சொல்ல வேண்டும்- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தைப் பற்றி கதைப்பதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றவர்தான் அங்கஜன் இராமநாதன். தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த ஒரு கட்சியின் ஊடாகத்தான் அவர் அரசியலுக்குள் வந்தவர். மகிந்த ராஜபக்ஷவின் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர்தான் அங்கஜன் இராமநாதன். அந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சிதான் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தை அழித்து இனப்படுகொலை செய்யும் வாயிலாக எங்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்த ஒரு கட்சி – தமிழர்களை அழித்த கட்சி. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் கற்பழிப்புகளுக்கும் காணாமல் ஆக்கப்படுதல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு நபர்தான் அங்கஜன்.
சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் இனப்படுகொலையில் அங்கஜன் இராமநாதனுக்கும் பங்கு இருக்கிறது.
ஆகவே, தமிழர்களை அழித்த ஒரு கட்சியில் இருந்து அரசியல் செய்துவிட்டு இப்பொழுது அந்தக் கட்சியிலிருந்து கலைக்கப்பட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவோடும் அதற்குப் பின்னர் சஜித் பிரேமதாஸவோடும் ( இரண்டு மூன்று நாட்கள்) பின்னர் ரணில் விக்கிரமசிங்கவோடும் மாறி மாறி ஒரு கொள்கை இல்லாமல் அரசியல் விபச்சாரிபோல நடந்துவிட்டு இப்பொழுது புதிதாக ஒரு சின்னத்தில் வந்திருக்கிறார்.
ஏனென்றால் அவருக்கு எந்தக் கட்சியும் இடம்கொடுக்கவில்லை. காரணம் அங்கஜனுக்கு கொள்கையே இல்லை. ஆகவே, கொள்கையே இல்லாத ஒரு மனிதர் தான் அங்கஜன். அவருக்கு தமிழினத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை. இவர் தமிழினத்துக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் வடக்கு – கிழக்கு மண்ணைவிட்டு வெளியேறி தான்சார்ந்த சிங்களக் கட்சி பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சிங்கள மக்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் போய் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆகவே அங்கஜன் இராமநாதனின் கருத்து “ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கின்றது”
தமிழ்த் தேசிய கட்சிகளைப் பற்றி கதைப்பதற்கு இவருக்கு தகுதியில்லை. ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டிய – பொறுப்புச் சொல்ல வேண்டிய ஒரு நபர் தான் அங்கஜன்- என்றார்.
“வீடாக இருந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என்று பிளவடைந்து தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
எம் மக்கள் அரசியல் ரீதியாகவும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் நிற்க வேண்டும் என்றால் தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே பலம் என அவர் அன்றே கணித்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.
ஆனால் இன்று எம் தமிழ் தலைமைகள் எமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து தமது சுயலாபத்திற்காக ஆளுக்கோர் பக்கம் நீயா? நானா? எனப் பிரிந்து நிற்கின்றனர்.
தமிழ் மக்களுக்காக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என அனைவரும் நம்பி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவடைய இடமின்றி உள்ள போதிலும் மேலும் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் கண்ணூடாக தெரிகின்றன.
வீடாக இருந்த அந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என பிளவடைந்து மக்களுடைய எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டுள்ளது.
மக்களுக்காக ஒன்றுபட முடியாதவர்கள் எப்படி மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள்? என்றும் அங்கஜன் கேள்வியெழுப்பினார்.
இந்த விமர்சனத்துக்கே சுகாஸ் பதிலளித்துள்ளார்.