ஒவ்வொரு நாட்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமானது.
கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடியும்.
அதன்படி, இந்தியாவில் இதுவரையில் 15 தடவை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டில் 16 ஆவது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொவிட் தொற்றின் காரணமாக நடத்தப்படவில்லை.
எனவே, 16 ஆவது மக்கள் கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக் கணக்கெடுப்பு பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடித்து விபரங்களை வெளியிடுவதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கணக்கெடுப்புக்கான கேள்விகளில், மொத்தமாக 31 கேள்விகள் உள்ளடங்கியிருப்பதோடு, குடும்பத் தலைவர், வீடு, நிலம், செல்போன் இருக்கிறதா? வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, கழிவறை வசதி உள்ளதா? போன்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.
இம் மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இதுதொடர்பில் அரசு எந்த முடிவுக்கும் வரவில்லை எனத் தெரிகிறது.
எந்த தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மக்கள் கணக்கெடுப்ப நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவரும் என மத்திய அரசு தரப்பு கூறுகறிது.
இம் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அடுத்த கணக்கெடுப்பு 2035 ஆம் ஆண்டு அடுத்து 2045 ஆம் ஆண்டு என சுழற்சி முறையில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.