இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து தமிழர்கள் மனம் குமுறுகின்றனர் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
பாரத தேசத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் எழுதிய
“தி இந்தியாவே” நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான “இந்திய மாவத்தை” 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது தவறு என பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
உண்மையாக இந்திய படைகளின் வருகை இலங்கை இந்திய உறவை பாதித்ததை விட இந்திய ஈழத் தமிழர்கள் இடையே பெரும் இராஜதந்திர பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பெரும் தொகையான உயிரிழப்புகளும், சொத்து இழப்பும் ஏற்பட்டது. இது வரலாறு.
ராஜதந்திரிகளின் அல்லது தலைவர்களின் உரைகள் மற்றும் நூல்களின் பதிவுகள் எதிர்கால அரசியல் ராஜதந்திர காய் நகர்த்தலுக்கான வியூகமாகவும் காலம் கடந்து உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் அறுந்து போன அல்லது உடைந்து போன அரசியல் உறவைப் புதிப்பிப்பதற்கும் வழிகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு தான் கடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் காலத்திலும் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னைய ஆட்சியாளர்கள் தடுக்கத் தவறியதாக உரையாற்றியதை ஊடகங்கள் மூலம் எல்லோரும் பார்த்தனர்.
உண்மையாக 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரை பாரததேசம் தடுத்து நிறுத்தியிருந்தால் பெரும் இன அழிப்பு தடுக்கப்பட்டிருக்கும். கோர யுத்தத்தை பாரத தேசம் தடுக்கவில்லை என்ற மனக் குமுறல் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஆறாத எரிமலையாக எரி்ந்து கொண்டுள்ளது. இதற்கான பரிகார நீதியை பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க பாரதப் பிரதமரும், வெளியுறவு ராஜதந்திர செயலகமும் பாதிக்கப்பட்ட மக்களினதும்
ஐ. நா. மனிதவுரிமைப் பேரவையின் முன்னைய ஆணையாளரின் இறுதியான அறிக்கையின் பரிந்துரையுமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக் கூறலும் நீதியும் மீள் நிகழாமையும் கிடைக்க ஒத்துழைப்பு வழங்க தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் இருந்து மீண்டவன் என்ற வகையில் வினயமாக வேண்டுகின்றேன் என்று சபா. குகதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.