உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு வழங்கிய காலம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க இன்று காலை 10 மணி வரை காலவகாசம் உள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, குறித்த காலப்பகுதிக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்” என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான சர்ச்சைக்குரிய அறிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி (10.10.2024) தபால் மூலம் தனக்கு கிடைத்ததாக உதய கம்மன்பில ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இரு அறிக்கைகளிலும் உள்ளடங்கப்பட்டுள்ள சில காரணிகளில் தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் இந்த இரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த தற்போதைய ஜனாதிபதி முன்வரவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் இணைப்புகள் கூட தமக்கு தபால் மூலம் கிடைத்ததாக இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை சரியான நேரத்தில் வெளியிடத் தயார் என அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்திருந்தார்.
மார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்புகளிலிருந்து பல விவாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.