பாரியளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட எட்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முன்னர் இறுதிச் சந்தர்ப்பமாக ஞாபக மூட்டல்களை வழங்கியதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார்.
இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபடும் குறித்த நிறுவனங்களை கடந்த தினங்களில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு அழைத்து வரிப்பணத்தை செலுத்துமாறு ஞாபகப்படுத்திய போதிலும் அதனை புறக்கணித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டநடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ள காரணத்தினால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 3.5 பில்லியன் ரூபாய் வரியை ஏய்ப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ஜூன அலோஷியஸிடமிருந்து குறித்த வரிப் பணத்தை நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தினூடாக விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழக்கு தொடர்ந்தாலும் கூட செலுத்தத் தவறும் வரியை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும் நிலையில் அர்ஜூன அலோஷியஸ் செலுத்த வேண்டிய தொகை எதிர்வரும் நாட்களில் நீதிமன்ற சட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அந்த பணத்தை செலுத்துகின்றார்களா என்பது தொடர்பிலும் நாட்டு மக்கள் அவதானத்துடன் இருப்பதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.