பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 206 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளாக 206 முறைப்பாடுகள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்தவொரு வன்முறையும் பதிவாகவில்லை. கிடைக்கப்பெற்ற 206 முறைப்பாடுகளில் 130 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, விருப்பு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், விருப்பு வாக்குச் சண்டையை உருவாக்காமல் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வன்முறைகளற்ற நியாயமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் ஆதரவாளர்களும், பொது மக்களும் ஒத்துழைப்புகளை வழங்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.