அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும்.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
ஐெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஐனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும்.
முன்னாள் ஐனாதிபதி கோத்தா தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் உள்ளது அதிகாரப்பகிர்வு தேவையற்றது 13 ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கூறிக் கொண்டு அதனை நீக்க புதிய அரசியலமைப்பு குழுவை தன்னிச்சையாக நியமித்த விழைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.
கோத்தாவின் வெளியேற்றத்தை சாதகமாக பயன்படுத்தி ஐனாதிபதிக் கதிரைக்கு வந்து விட்டு கோத்தா தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை அநுர கையில் எடுப்பதாக இருந்தால் கோத்தா சந்தித்த அதே நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும்.
தமிழர் விவகாரத்தை இனவாதமாக கையில் எடுப்பதான வெளிப்பாடுகள் தான் தொடர்ச்சியாக அநுர அரசின் பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது இப்படியான வெளிப்பாடு நாட்டின் மாற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையமாட்டாது.