வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில், பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கை இன்றையதினம் (09) நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு எடுத்த போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா, தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் வைத்தியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது, பிணை நிபந்தனைகளை மீறியமை, ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை உள்ளிட்ட காரணங்களால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அர்ச்சுனாவின் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அதற்கான கட்டளை நாளைய தினம் வியாழக்கிழமை வழங்கப்படும் என நீதிமன்றம் திகதியிட்டிருந்தது.
வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுடன் பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.