– ரஞ்சன் ராமநாயக்க தலைவர், டில்ஷான் தேசிய அமைப்பாளர்
– பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டி
புதிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு வாரங்களே இருக்கின்ற நிலையில் மக்களின் குரலாக புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் இக்கட்சியின் உருவாக்கத்திற்கு மக்களே உத்வேகம் அளித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இது மக்களின் எதிர்பார்ப்பிற்கான வெளிப்பாடு. மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை சமீபத்திய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. மக்களின் இத்தகைய விருப்பத்தை ஜக்கிய ஜனநாயகக் குரல் நிறைவேற்றும்.
பழைய கட்டமைப்புகள் தகர்ந்துவிட்டது. இது புதுமையான, புதிய மற்றும் தைரியமான கட்சி. இதனை நடைமுறைக்குக் கொண்டு வர 2 வருட காலமாகியுள்ளது.”
“இக்கட்சி ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை மட்டுமே சார்ந்தது அல்ல. நாங்கள் மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். மக்கள் மீது கடுமையான சித்தாந்தத்தைத் திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதனால் கோட்பாடு மற்றும் முழக்கம் ஆகியவற்றின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள கட்சிகள் இந்நாட்டைக் கடனில் மூழ்கடித்து உலகத்தின் பார்வையில் நம் நாட்டை கேலிக்கூத்தாக்கி விட்டன. இதற்கெல்லாம் இப்போதே முடிவு கட்ட வேண்டும்.
“ஊழலுக்கு முற்றுப்புள்ளி – நாட்டின் பொருளாதாரத்தையும் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு அறிவார்ந்த கல்வி – சுகாதாரம் – அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை உள்ளிட்ட ஐந்து முக்கிய தூண்களால் ஜக்கிய ஜனநாயகக் குரல் கட்டி எழுப்பப்பட்டுள்ளது” எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தேவேளை, பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடும் இக்கட்சியின் வேட்பாளர்களாக முன்னாள் எம்.பி வடிவேல் சுரேஷ் மற்றும் மொஹமட் ராசிக் அனார் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல பிரபலங்கள் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.