புதிய அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் முயற்சி

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் செயற்படுகின்றதா?

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கலால் திணைக்களம் செயற்பட்டு வருகின்றாதா என்று வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மதுவுக்கு எதிராக செயற்படுவதாக கூறியது. அவர்கள் கூறியது போலவே செய்யப்படும்போது அதற்கு கலால் திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்து, பிரதேச செயலர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக ஒற்றைக்காலில் நிற்கிறது. அதனால் பிரதேச செயலர்கள், வழக்குக்குள் சிக்கினால் தங்களுக்கு பிரச்சினை என பயப்படுகின்றார்கள்.

உடனடியாக இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாகவும் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் தெரிவித்துள்ளார்.

07-10-2024 அன்றையதினம் சங்கானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சங்கானையில் புதிதாக ஒரு மதுபான சாலையை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த விடயம் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி சர்வதேச நல்லொழுக்க தினத்தன்று சங்கானை பிரதேச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம்.

இது இவ்வாறு இருக்கையில் கொழும்பு மதுவரித்திணைக்கள ஆணையாளர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களான சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை, கரவெட்டி மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார். குறித்த மதுபானசாலைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், அல்லது உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர்களுக்கு கடிதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தனி சிங்களத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டது.

கலால் திணைக்கள ஆணையாளருக்கு இடமாற்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் அந்த பதவியை விட்டு போகின்றார் இல்லை. எனவே உடனடியாக கலால் திணைக்கள ஆணையாளரின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தி, இவ்வாறான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்ய வேண்டும்.

ஜனாதிபதியின் அறிவித்தல்களுக்கு ஏற்ப செயற்படுவதா, கலால் திணைக்களத்தின் அறிவிப்புக்கு ஏற்ப செயற்படுவதா, மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதா என பிரதேச செயலர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அறிவிப்பானது, பிரதேச செயலர்களுக்கு எழுத்து வடிவில் கிடைக்கப்பெறுமானால் அவர்கள் அதற்கேற்ப செயற்பட்டு அனுமதிப் பத்திரங்களை வழங்காமல் இருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin