யாழ் சேவையை விரிவுப்படுத்தியது இந்திய விமான நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே தினசரி சேவையை தொடங்கவுள்ளதாக இன்டிகோ அறிவித்துள்ளது.

இலங்கையில் கொழும்புக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடமாக யாழ்ப்பாணத்திற்கான சேவையை இன்டிகோ அறிவித்துள்ளது.

விமானத்திற்கான முன்பதிவு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமான மற்றும் சிறந்த சர்வதேச சுற்றுலாத் தலமாக இலங்கை பார்க்கப்படுவதன் பின்னணியில் இன்டிகோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் இந்த பாதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. கடந்த ஜூன் மாதம் 28,631க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் செல்வதற்கான ஆர்வமும் இந்திய பயணிகளின் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இன்டிகோ யாழ்ப்பாணத்திற்கான சேவையை அறிவித்துள்ளது.

இன்டிகோ நிறுவனம் தற்போது நான்கு இந்திய நகரங்களில் (புது டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை0 இருந்து கொழும்புக்கு சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin