அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தியது.
அதற்கமைய, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படாத, கம்பனிகளால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்தார்.
அவரின் தலைமையில் இந்தக் குழு பாராளுமன்றத்தில் அண்மையில் (11) கூடிய போதே இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. இதன்போது, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (LRC) அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் தற்போது 7000 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுக் காணப்படுவதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 56,000 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, மாவட்ட ரீதியாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு (LRC) சொந்தமான காணியின் தொகை குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்பு மற்றும் உறுதியை வழங்கும் முறைமையை மீள்பரிசீலனை செய்து, அந்த செயன்முறையை எளிமைப்படுத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.
அத்துடன், வணிக நடவடிக்கைகளுக்காக காணிகளை விடுவிக்கும் போது சம்பந்தப்பட்ட விடுவிப்பு நடவடிக்கைகளுக்கு அறவிடும் கட்டண முறைமை தொடர்பான அறிக்கை ஒன்றை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சுரங்க அகழ்வுக்காக தற்பொழுது வழங்கப்படும் 1 பெர்சஸ் காணியின் அளவை அதிகரிக்குமாறும், ஒரு பெர்சஸுக்கு அறவிடும் 40,000 ரூபாய் வரியை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.
அத்துடன், 2010க்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் அனுமதியின்றி குடியமர்ந்தவர்களுக்கு பத்திரங்களை வழங்கும் போது, அதனை 2021 க்கு முன்னர் குடியமர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வருடத்தை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவது தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். அதற்கமைய, பொருளாதார வளர்ச்சிக்கு வினைத்திறனாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட காணிகளை இலங்கையிலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான டபிள்யு,எச்.எம். தர்மசேன, வசந்த யாப்பா பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, வருண பிரியந்த லியனகே, ரோஹன பண்டார, நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜகத் பிரியங்கர ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.