சாவகச்சேரி வைத்தியசாலை நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வைத்திய அதிகாரி வினோதன் முன்வைத்துள்ள ஆலோசனைகள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக வைத்திய அதிகாரி திரு. வினோதன் அவர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகள்.

விரைவாக இதைச் செயற்படுத்தி அப்பாவி நோயாளர்கள் மற்றும் பொதுமக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

✍️தீர்ப்புகள் திருத்தப்படலாம் ..
தீர்மானங்கள் மாற்றப்படலாம்….
ஆனால் அப்பாவி நோயாளர்களின் உயிர்களை பணயம் வைத்து இருதரப்புகள் தமக்குள் மோதிக்கொண்டிருப்பதனை நாகரீகம் அடைந்த எந்தவொரு சமூகமும் அனுமதிக்காது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன?

அவையடக்கம்:
1. இந்த பத்தி ஒரு அரச உத்தியோகத்தர் என்ற முறையிலன்றி, ஒரு நேர்மையான சமூக ஆர்வலன் என்ற முறையிலும், மருத்துவ நிர்வாகத்துறையில் உள்ள மிகவும் சிறிய எண்ணிக்கையிலான விசேட மருதத்துவ நிபுணர்களின் ஒருவன் என்ற முறையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதல் முதலாக மருத்துவ நிர்வாகத் துறையில் 43 வயதில் விசேட மருத்துவ நிபுணர் ஆனவன் என்ற முறையிலும் (Salary code – SL -3) என்னால் எழுதப்படுகின்றது.

பின்னணி:
மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிரந்தரமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட மருத்துவர், மருத்துவ நிர்வாகத்துறையில் விசேட வைத்தியராகும் தகுதியைப் பெறுவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் பிராந்திய பல்கலைக்கழக வைத்தியசாலையில் விசேட பயிற்சி பெறச்சென்றமையால் அந்த பதவியை தற்காலிகமாக நிரப்ப அதே சுகாதார அமைச்சின் செயலாளரினால் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட மருத்துவர், அந்த வைத்தியசாலையில் தென்மராட்சி மக்களுக்கு மிகவும் அவசியமான பலகோடி ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டு பலவருட காலம் பாவிக்கப்படாமல் இருந்த அவசர மற்றும் விபத்து சேவைப்பிரிவையும் பிரசவ விடுதித்தொகுதியையும் ஒரு சில தினங்களில் திறந்து இயங்க வைக்க நடவடிக்கை எடுத்தமை பலர் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

அதே நேரம் அவரால் மேற்கொள்ளப்பட்ட தங்குமிட விடுதி மாற்றங்கள், வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துகின்றேன் என்ற போர்வையில் பதில் வைத்திய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட முன்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் மருத்துவர்கள் மத்தியில் அவர் தொடர்பில் கிலேசத்தையும், சந்தேகத்தையும் உண்டு பண்ணின.

இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கம் போராட்டத்தை ஆரம்பித்ததனால் சுகாதார சேவைகளுக்கு வரி செலுத்தும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள் பாதிப்படைந்து, இந்த சூழ்நிலை பொது மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. இது எதிர்வரும் வாரம் ஒரு பெரும் மக்கள் போராட்டமாக வெடிக்கக்கூடிய ஏதுநிலைகள் தென்படத் தொடங்கியுள்ளன.

பிரதிபலிப்பு:
சாவகச்சேரி வைத்தியசாலையில் மக்கள் வரிப்பணத்தில் பலகோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு நவீன மருத்துவ உபகரணங்கள் பலவும் அங்கு நிறுவப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவின் பயன்களை உடனடியாக தென்மராட்சி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் எவரும் மாற்றுகருத்துக்களைக் கொண்டிருக்கமுடியாது.

மின் பிறப்பாக்கி back up இல்லை என்று கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. மின் பிறப்பபாக்கி தேவையென்றால் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டில் புதிதாககொள்வனவு செய்து நிறுவப்பட்ட 60 Kw மின்பிறப்பாக்கிக்கு பதிலாக கழற்றியற்றப்பட்டு தற்பொழுது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைக்கப்படுள்ள பழைய மின்பிறப்பாக்கியை சிறிய திருத்தம் செய்து தற்காலிகமாக இந்த பிரிவில் பயன்படுத்தமுடியும்.

சிலமாதங்களுக்கு முன்னர் இந்த பிரிவை இயங்கவைக்க தேவையான வள வசதிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க கௌரவ வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சார்பில் நான் இந்த பிரிவிற்கு விஜயம் செய்தேன்.

அதன்பொழுது இங்கு காணப்பட்ட பௌதீக மற்றும் மருத்துவ உபகரண வசதிகளைக் கண்டு நான் பிரமித்துப்போனேன். ஏனெனில் இங்கு காணப்பட்ட பௌதீக வளங்கள் மன்னார் அல்லது முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலைகளிலேயே காணப்படவில்லை. இங்கு காணப்பட்ட அவசர சிகிச்சைக்கான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் புறா எச்சத்தினால் நீராட்டப்பட்டு காணப்பட்டன.

அவரச சிகிச்சை பிரிவினுள் புறாவை விட்டு யன்னல்கள் சாத்தப்பட்டு இருந்ததை கண்ணுற்ற நானும், முன்னாள் மருத்துவ அத்தியட்சகரும் யன்னலை திறந்து புறாக்களை வெளியேற்றவேண்டியிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் முன்னைய மருத்துவ அத்தியட்சகர் மற்றும் பொது வைத்திய நிபுணர்கள் இந்த பிரிவை மக்கள் பாவனைக்கு இயன்றவிரைவில் திறந்து வைக்கவேண்டும் என்ற பெருவிருப்புடன் இருந்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆக மொத்தத்தில் இந்த பிரிவை இயங்கவைப்பதை தடை செய்யவேண்டும் என்று எவரும் விரும்பியதாக எனக்குத் தென்படவில்லை.

மறுபுறத்தில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர், வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றேன் என்ற போர்வையில் பதில் மருத்துவர்கள் நியமிக்கப்பட முன்னர் மருத்துவர்களை இடம்மாற்றம் செய்தமை ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று. பதில் மருத்துவர்கள் நியமிக்கபபட முன்னர் மருத்துவர்களை விடுவிக்குமாறு எந்த சுற்றறிக்கையும் நிபந்தனையிட முடியாது; ஏனெனில் மக்களுக்கு சுகாதாரசேவைகளை இடையறாது வழங்கவேண்டிய பொறுப்பு எல்லா சட்டங்களிலும் மேலான அரசியலமைப்பினால் திணைக்கள மற்றும் நிறுவனத்தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இவரால் வழங்கப்பட்ட சில இடம்மாற்றங்கள் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டினையும் என்னால் முழுமையாக மறுதலிக்க முடியவில்லை. இங்கு கடமையாற்றும் வைத்தியநிபுணர்கள், மருத்தவர்கள் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தது. அவர்கள் தனியார் வைத்தியசாலையை வளர்ச்சியடைய செய்ய அரச வைத்தியசாலை சேவைகளை முடக்குகின்றார்கள் என்ற குற்றச்சாட்டினையும் என்னால் ஏறுக்கொள்ள முடியவில்லை. ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம்.

எனவே தமது உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்ற சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கம் இதில் தலையிட்டமையை என்னால் தவறாக பார்க்க முடியவில்லை. எனினும் தொழிற்சங்கம் தரப்பில் ஒரு அன்பர் (எனது நண்பரும் கூட!) நடந்து கொண்டவிதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது. இது தொடர்பில் அநேகருக்கு கரிசனை எழுந்தது போல எனக்கும் கரிசனை எழுந்தது.

மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க, வைத்திய அத்தியட்சகரை , மாற்றவேண்டும் என்பதற்காக பொதுமக்களையும் அப்பாவி நோயாளர்களையும் அவர்கள் பணயம் வைத்து அவர்களுக்கான சேவைகளை முடக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வைத்தியசாலையில் மன ஒருமைப்பாட்டுடன் கடமையாற்ற மருத்துவர்களுக்கு முடியாத நிலைமை இருந்திருப்பின் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளிலோ அல்லது நடமாடும் சேவை மூலமாகவோ ஆகக்குறைந்தது சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் ஒரு பகுதியை மறைத்து வெளிநோயாளர் சேவைகளை வழங்கியிருக்கலாம். அவசர, விடுதி சேவைகளை தொடர்ந்து முன்கொண்டு சென்றிருக்கலாம். இதன் மூலம் அவர்கள் மீது கறை படிவதனையும், இந்த போராட்டம் தனியார் வைத்தியசாலைகளை நோயாளர்களால் நிரப்புவதற்கானது என்ற குற்றச்சாட்டு தொழிற்சங்கம் மீது சுமத்தப்படுவதிலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கலாம்.

பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்:
1. புதிய பதில் வைத்திய அத்தியட்சகரின் அதிகார வரம்பு மீறல்கள் மற்றும் அதற்கு எவ்வாறு கடிவாளமிடுதல் என்பது தொடர்பானவை
2. பொதுமக்களுக்கான வைத்திய சேவைகள் முடக்கப்பட்டமை மற்றும் அவற்றை உடனையாக மீள ஆரம்பிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பானவை

1. புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நிர்வாக ரீதியில் அனுபவ முதிர்ச்சியடையும் வரை அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் சிலவற்றை குறிப்பாக இடம்மாற்றம் வழங்கல், வருடாந்த வேதன ஏற்றத்தை அனுமதித்தல் அல்லது சிபாரிசு செய்தல் போன்றனவற்றை அவரிடமிருந்து எடுத்து அவரை விட சிரேஷ்ட நிலையில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.

இந்த அதிகாரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்தோ அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்தோ இந்த கடமைகளை மேற்கொள்ள முடியும்.

மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இதற்கு பொருத்தமான, வைத்திய கலாநிதி பரமேஸ்வரன், போன்ற தொடர்பாடல் திறனுள்ள, நேர்மையான பண்பான அதிகாரிகள் உள்ளனர். இந்த சிக்கலான நேரத்தில் அவர்களை இதற்கு பயன்படுத்தும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அல்லது அவருக்கு மேலேயுள்ள அதிகாரிகளுக்கு உள்ளது. இந்த நடவடிக்கைகளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்பார்வை செய்யமுடியும்.

தற்பொழுது கடமையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிகவும் திறமையானவர், பண்பானவர், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி தீர்மானம் எடுக்கக் கூடியவர், எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையானவர் ஆனால் சற்று மென்மையானவர். அவரால் இந்த நடவடிக்கைகளை நிச்சயமாக வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்.

சுருங்கக் கூறின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகரின் மனிதநேய, புத்தாக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடமளித்து அதேநேரத்தில் அவருடைய மனித வள முகாமைத்துவ நடவடிக்கைகள் சிலவற்றினால் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்து அவர்களை விடுவித்து அனைவரும் கிலேசமின்றி பணியாற்றும் சூழ்நிலையை வைத்தியசாலையில் ஏற்படுத்தும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த தீர்வினை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறின் அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்தல் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

2. இங்கு 1 இல் வழங்கப்பட்ட தீர்வினை ஏற்று தொழிற்சங்கம் உடனடியாக தமது போராட்டத்தை விலக்கிக் கொள்ளவேண்டும். அவர்கள் அதற்கு சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் உள்ளது.

ஒருவேளை அவர்கள் அதற்கு சம்மதிக்க இணங்காது விடின் தனியார் வைத்தியசாலைகளில் வருமானத்திற்காக அவர்கள் அரச வைத்தியசாலையின் செயற்பாடுகளை முடக்குகின்றார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டினை உறுதி செய்பவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் ஒருவேளை தொடர்ந்து போராட்டத்தினை முன்னெடுத்த்தால் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை சுமுகமாக்க இடைக்காலதடையைப் பெற்றுக்கொள்ளும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

எனவே அனைவரும் இந்த வழிமுறைகளை பின்பற்றி தற்பொழுது தென்மராட்சி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான மனிதாபிமான நெருக்கடிக்கு உடனடித் தீர்வினை இன்றே பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இதற்கு என்னுடைய பங்களிப்பு அவசியப்படுமாயின் தனிப்பட்ட முறையில் அதற்கு உதவ அடியேன் சித்தம் கொண்டுள்ளேன் என்றும் அறியத்தருகின்றேன்.

தீர்ப்புகள் திருத்தப்படலாம் ..
தீர்மானங்கள் மாற்றப்படலாம்….
ஆனால் அப்பாவி நோயாளர்களின் உயிர்களை பணயம் வைத்து இருதரப்புகள் தமக்குள் மோதிக்கொண்டிருப்பதனை நாகரீகம் அடைந்த எந்தவொரு சமூகமும் அனுமதிக்காது

நன்றி
வணக்கம்
இப்படிக்கு
அநியாயம் நிகழும் இடத்தில் குரல்கொடுக்கும்
உங்களின் வினோ

Recommended For You

About the Author: admin