ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் சதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைகக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன.

என்றாலும், உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகரிக்கப்பட்டுள்ள தீர்மானமொன்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் உள்நோக்கத்தை இது வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாலக கொடஹேவா இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது,

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ள பின்புலத்தில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முற்படுகிறார்.

நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்து அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமென நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும்.

இதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அதன் ஊடாக தேர்தலை ஒத்திவைப்பது ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாக உள்ளது.

அரசாங்கம் இதுவரை செய்த அனைத்து மோசமான சூழ்ச்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால் மக்களின் ஆணைக்கு இடமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

Recommended For You

About the Author: admin