இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர்.
அங்கு இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மண்டபம் சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
பொலிஸார் விரைந்து வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பின், ராமேஸ்வரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த விசாரணையின் போது அவர்கள் இலங்கையின் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி கீதா (34), அவரது குழந்தைகள் அனுஜா (8), மிஷால் (5) என தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கைத்தீவில் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத காரணத்தினால் யோகவல்லி இந்தியாவுக்கு வர தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
“இங்கே அகதிகள் முகாமில் பிறந்து பல வருடங்கள் இங்கு வசித்து வந்த நான், இலங்கைக்கு சென்று திருமணம் செய்துகொண்டேன். எனது பெற்றோர் வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கணவரைப் பிரிந்து இலங்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். மீண்டும் எனது தாயுடன் வாழ முடிவு செய்தேன். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர 2 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை செலவளித்தேன் ” என யோகவள்ளி தெரிவித்தார்.
விசாரணைகள் தொடரும் நிலையில் மூவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரையில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.