தேசிய அரசாங்கமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க முற்பட்டால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் புத்திக பத்திரன எம்.பியால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருவதாக கடந்த காலத்தில் பரவலாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவந்தன.
என்றாலும், தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என்றும் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் நோக்கத்திலேயே மாத்தறையில் பிரமாண்ட கூட்டமொன்று கடந்த ஞாற்றுக்கிழமை நடத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
என்றாலும், இத்தருணத்தில் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடைவது உறுதியென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்துவோம் என பொய் கூறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இலங்கைத் தீவில் நவம்பர் மாதத்துக்குள் தேர்தலொன்று நடைபெறாவிட்டால் அது பாரிய போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன், தீவு முழுவதும் வன்முறைகள் வெடிப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.