பிரான்ஸில் திடீர் தேர்தல் அறிவிப்பு

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரான்ஸில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் மற்றும் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் எனவும், அவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளை ஆதரிப்பார்கள் எனவும் சர்வதேச ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இதுவொரு ஜனநாயக செயல்முறை எனவும், விளையாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவினரின் தேவை அதிகமாக கணப்படும் நிலையில், அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்கனவே பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு அடிப்படையில் கூடுதல் சுமை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் தலைமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் Frédéric Lauze தெரிவித்துள்ளது.

அத்துடன், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், சமூக ஒழுங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அதேநேரம் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரான்ஸில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர்களும் ஏனைய குழுக்களும் மாற்றப்படும் நிலையில், அது அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பை சீர்குலைத்து, பல சிக்கல்களை எழுப்புமென பிரான்ஸில் உள்ள பழமைவாத குடியரசுக் கட்சியின் துணைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin