தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்!
இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை தெரிவித்தார் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன்.
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரிய வரலாற்றுத் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
 எழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசம் ஒரு தலைப் பட்சமாகத் தீர்மானித்துவந்துள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசு ஈழத்தமிழர் தேசத்தையும் அதன் தாயகத்தையும் ஆக்கிரமித்துள்ளது.
ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் நிர்ணயிக்கும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து விளையாடி ஆக்கிரமிக்கப்பட்ட தேசம் தனக்குரிய அரசியற் தீர்வைக் கண்டுவிடச் சற்றும் இடமளிக்காத வகையில் இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையும் மத ரீதியான முதன்மைத்துவமும் அரசியலமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தல் அரசியலில், அதுவும் குறிப்பாக பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏன் தமிழர்களான நாமும் பங்கேற்கிறோம் என்றால், அதற்கு ஒரு காரணம் உள்ளது.
ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தின் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எமது தேசிய இனத்தின் அரசியல் வேணவா மறுதலிக்கப்படுவதற்கும் மலினப்படுத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தல் அரசியல் ஓர் அரசியல் வெளியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும் எமது மக்களிற் பெரும்பான்மையினரின் ஜனநாயக ஆணை இல்லாதோர் எமது பிரதிநிதிகள் போல வலம்வந்து எமது தேசிய வேணவாவைத் திரிபு படுத்தாமல் இருப்பதற்காகவும் எமது பிரதேச ரீதியான தேர்தல் அரசியலை நாம் ஓர் தடுப்பு உத்தியாகப் பயன்படுத்துகிறோமே அல்லாது, தேர்தல் அரசியலை மூலோபாய வழிவகையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்தவில்லை. இத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதன் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை நாம் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதாக எவரும் ஒரு போதும் பொருள்கோடல் செய்ய இயலாது.
அதுமட்டுமன்றி, அவ்வப்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வளங்களை ஏதேனும் ஒரு வகையில் ஆற்றுப்படுத்த இயலுமா என்ற முயற்சியிலும் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துகிறோம். சர்வதேசத் தளத்தை நோக்கி எமது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு இந்தப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பயன்படுத்துகிறோம்.
இவ்வகையில் மாகாண சபையின் அங்கீகாரத்தோடு ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தேசத்தின் கருத்தியலை எண்ணற்ற வழிகளில் முன்வைத்து வந்துள்ளேன்.
பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் எவ்வாறு பொருத்தமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய மிகச் சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளே செயற்பட்டுள்ளனர். காத்திரமான சில நகர்வுகளை மாத்திரமே மேற்கொள்ள முடிந்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிறைவேற்றிய இன அழிப்பு நீதிக்கான தீர்மானம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
தேர்தல் அரசியல் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தீவில் ஒரு மூலோபாய வழியாக அமையும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டது. அதை எந்த அளவில் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதில்
மட்டுமே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்பது பெயரளவில் ஜனாதிபதி என்ற ஒரு தனிமனிதரிடம் வைப்பாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம் மீதான மத ரீதியான முன்மைத்துவத்துவத்தையோ எமது மூலோபாயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது.
இதைப் போலவே இலங்கைப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இந்த அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையையும் தீவு முழுவதிலுமான தேரவாத சிங்கள அரசியற் பௌத்தத்தின் முதன்மைத்துவத்தையும் மாற்றுவதற்கோ நீர்த்துப்போகச் செய்வதற்கோ எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகினும் சரி, பாராளுமன்றப் பெரும்பான்மையாகினும் சரி ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட எந்தத் தீர்வையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அழுத்தம் இன்றி ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இன அழிப்புப் போரின் பின்னரான முழுமையான ஆக்கிரமிப்புச் சூழலில் அந்த நிலைமை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் மெய்நடப்பு அரசொன்றைக் கட்டியெழுப்பி, அமைதிப் பேச்சுக்களைத் தீவுக்கு அப்பாலான மூன்றாம் தரப்புச் சர்வதேச அனுசரணையோடும் மத்தியஸ்தத்தோடும் ஏற்படுத்தும் சூழலைத் தோற்றுவித்து, ஒற்றையாட்சித் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு எமக்குத் தேவையான மூலோபாய அழுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அதன் போது தனது சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர் தேசம் நடைமுறையில் எடுத்தாண்டது. அதன்மூலம் அரசியற் தீர்வுக்கான அரசிலமைப்புக்கு அப்பாலான சூழல் உருவாக்கப்பட்டு அரசியற் தீர்வு பற்றிப் பேசப்பட்டது. யார் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்கவேண்டும் யார் பங்கேற்கக் கூடாது என்பதை மக்களாணையோடு எடுத்தாள தேர்தல் அரசியல் பயன்பட்டது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது.
எப்போதோ தந்தை செல்வா அவர்களால் முடித்துவைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருந்த கட்சி மீண்டும் மேற்கொண்டுவரப்பட்டது தேர்தல் இலச்சினையை ஒரு அரசியல்வாதி முடக்கியதால் நேர்ந்த ஒரு விபத்து மாத்திரமே. இதையெல்லாம் மீண்டும் சிறிதாவது மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை உள்ளாக்க சர்வதேச அழுத்தம் ஒன்றே ஈழத்தமிழர் தேசத்திடம் எஞ்சியுள்ள வழிவகையாக உள்ளது. இதுவே மூலோபாய முன்னெடுப்புக்கான பாதை.
ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை எனப்படுவதும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி எனப்படுவதும் இரண்டு பெரும் மூலோபாயத் தூண்கள்.
ஆகவே, இந்த மூலோபாய வழிவகையை ஈழத்தமிழர் தேசம் எடுத்தாள வேண்டுமானால் சிங்களப் பேரினவாத வேட்பாளர்களை நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக்கும் தேர்வுகளுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசம் ஈடுபடுவது எதுவகையிலும் பொருத்தமற்றது. அவர்களோடு பேரம் பேசியும் எதையும் சாதிக்கமுடியாது. அவர்கள் நலிவடைந்துள்ளார்கள், பிளவடைந்துள்ளார்கள் என்று எம்மை நாமே ஏமாற்றி தெரிவுகளை மேற்கொண்டு எதையும் மூலோபாய ரீதியாகச் சாதித்துவிட இயலாது. இதற்கு ஏற்கனவே வரலாறு பல பாடங்களைப் புகட்டியுள்ளது.
தற்காலிக உத்தியாக ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டு மூலோபாயத்துக்குரிய அரசியற் பயணத்தைச் சிதைத்துவிடுவது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும்.
இதனாற் தான், ஜனாதிபதித் தேர்தலை நாம் எவ்வாறு கையாளுவது என்பதில் மூலோபாயத்துக்குரிய அணுகுமுறைக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கருத்து மேலெழுகிறது. இதனாற் தான் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை நானும் ஆதரிக்கிறேன். ஆனால், அதற்கு ஏற்ற சரியான கொள்கை வகுப்பு இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அதற்குரிய சரியான வேட்பாளரும் எம்மிடம் இருக்கவேண்டும்.
 ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழல் உருவாக்கியுள்ளது.
ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையைத் தோற்றுவிப்பதே காலத்தின் தேவையாக உள்ளது.
இருப்பினும் இதைச் சரிவரச் செய்யவேண்டுமானால், ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும் விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் ஒருவரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தேசம் தகுந்த தேர்தல் விஞ்ஞாபனத்தோடு நிறுத்தவேண்டும். அவர் அதிக வாக்குகளால் வெற்றிபெறவேண்டும். அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்கவேண்டும்.
பொதுவேட்பாளரின் முழுமுயற்சியும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி நோக்கியதாக அமையவேண்டும்.
இதற்குரிய அஞ்சாநெஞ்சத் துணிவும், தகைமையும் வன்மையும் பொருந்திய ஒருவர் ஈழத்தமிழர் நிழல் ஜனாதிபதிக்குரிய பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படவேண்டும்.
இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திப்பது ஈழத்தமிழர் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
அதுமட்டுமல்ல, அரச பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி போன்றவற்றின் தார்ப்பரியங்களைப் புரியாத, அவற்றை எடுத்தாள இயலாத ஒருவர், அதுவும் இவ் விடயங்களில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஒருவர் பொதுவேட்பாளராகி இந்தக் கைங்கரியத்தைச் சாதிக்கமுடியாது.
ஆகவே, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக சர்வதேச நீதி கோரிய பயணத்தில் காத்திரமாகப் பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவளாகிய நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன் என்பதை இது குறித்த அக்கறையுள்ள அனைவரின் கவனத்துக்கும் இத்தருணத்தில் கொண்டுவருவது எனது கடமையாகிறது.
அதுவும், எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி, ஈழத்தமிழருக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும்போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாரக உள்ளேன் என்பதையும் பரந்துபட்ட சமூகத்துக்குத் தெரிவிப்பதும் எனது கடமையாகிறது.
அதுமட்டுமன்றி, இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்பதையும் நான் சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.
 ஆகவே, இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும். அதனால், இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடைமுறையிற் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும்.
 பொதுவேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு எந்தவித பொறுப்புக்கூறலும் அற்ற வகையில் விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்காமல் நடக்கவேண்டிய விடயத்தை பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இதயசுத்தியுடனும் அணுகவேண்டும்.
 இதை எதிர்பார்க்கும் வேளையில், குறிப்பாக எதிர்வரும் நாட்களில் தென்னிலங்கையில் களமிறங்கத் தயார் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இயன்றளவு நேரடிச் சந்திப்புகளை மேற்கொண்டு சில ஆழமான கேள்விகளை எழுப்பி இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதிக்கான சிங்கள தேசத்தின் வேட்பாளர்களை ஈழத்தமிழர்கள் ஏன் நிராகரிக்கவேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் நேரடியாகவே தெரிவிக்கவுள்ளேன். அதன் விளைவுகளை மக்களுக்கும் அறிவிக்கவுள்ளேன். என்னால் இயன்ற அர்த்தமுள்ள பங்கு இதுவாகவே இருக்கமுடியும்.
 குறிப்பாக, ஆறாம் சட்டத்திருத்தத்தை அகற்றி, ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டை அங்கீகரித்து, தீவின் வடக்கு-கிழக்குப் பகுதியில் பௌத்தத்திற்கான முதன்மைத்துவத்தை நீக்குவதே தனது விருப்பம் என்று பகிரங்கமாக எந்த ஒரு சிங்கள வேட்பாளரேனும் தெரிவிக்கத் தயாராக உள்ளாரா என்ற கேள்வியையும், இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்றதா இல்லையா என்பதை இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பட்டயத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கி அரச பொறுப்புக்கூறலை விசாரிக்க சர்வதேச நீதி மன்றை நாடும் துணிவு சிங்கள வேட்பாளர்களில் எவருக்கேனும் உண்டா என்றும் அவர்களிடன் நேரடியாகவே வினவி அவர்கள் அதற்குத் தரும் பதிலை ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவும் என்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ள உள்ளேன்.
ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தைப் போலவே,
புலம் பெயர் சமூகத்திலும் ஒற்றுமையின்மை காணப்படுகிறது. இதற்கு, பிராந்திய அரசியலும் சர்வதேச அரசியலும் பிரதான காரணம். இமாலயப் பிரகடனம் எங்கிருந்து இங்கு வந்தது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்குரிய விடை கிடைக்கும்.
இருப்பினும் இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதில் சில காத்திரமான நகர்வுகள் பல முனைகளில் இருந்தும் புலம்பெயர் ஈழத்தமிழர் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தவகையில், காத்திரமான நகர்வுகள் முன்னேறிச் செல்லும் வகையில் எமது மூலோபாய முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இத்தால் வலியுறுத்துகிறேன்-என்றார்.

Recommended For You

About the Author: RK JJ