மூன்றாவது முறையாக பிரதமராகின்றார் மோடி: எட்டாம் திகதி பதவியேற்பு

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை வென்றிருந்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன.

இதில் பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்த நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெற்றிருக்கவில்லை.

இதனால் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற இரு பிரதான கட்சிகளும் முனைப்பு காட்டியிருந்தன.

இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் இரு பிரதான கட்சிகளும் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.

முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கிட்டியுள்ள நிலையில் ஆட்சியமைக்க குடியரசு தலைவரிடம் பாஜக இன்று உரிமை கோரியுள்ளது.

இதன்படி, மூன்றாவது முறையாக எதிர்வரும் எட்டாம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிசெய்து வருகின்றார்.

அவர் முதல் முறையாக பதவியேற்ற போது உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமராக மோடி பதவியேற்றதும் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin