வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
நெதர்லாந்து பிரஜைகள் முந்தைய அரை நூற்றாண்டுகளில் 80 நாடுகளில் இருந்து சுமார் 40,000 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்த நடைமுறை குறைவடைந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு சுமார் 145 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் 70 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு முறைகேடுகள் பதிவு செய்யபட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நெதர்லாந்து சர்வதேச தத்தெடுப்புகளை முடக்கியது.
இதனைத் தொடர்ந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் அடித்தளத்தை கண்டறிந்து, ஆவணங்களை சோதனைக்குட்படுத்திய நிலையில் அவர்களின் தத்தெடுப்பு சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தத்தெடுப்பதனை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, லெசோதோ, தாவான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, பல்கேரியா மற்றும் போர்த்துகல் ஆகிய எட்டு நாடுகளில் இருந்து மட்டுமே தத்தெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையிலே, தற்போது இந்த நாடுகளில் இருந்தும் குழந்தைகளை தத்தெடுப்பதனை நெதர்லாந்து அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.