நாடாளுமன்றத்தில் தரமற்ற உணவு-சபாநாயகரிடம் அமைச்சர்கள் முறைப்பாடு

இலங்கை நாடாளுமன்றத்தின் உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றது என சபாநாயகரிடம் சில அமைச்சர்கள் குழு புகார் அளித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உண்ணக்கூடிய உணவை வழங்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது, அமைச்சர்களிடம் இருந்து வசூலிக்கும் தொகைக்கு ஏற்ப, தரமான உணவு வழங்க நாடாளுமன்ற உணவகத் தலைவருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சுமார் இருபது அமைச்சர்கள் சிறிது காலமாக நாடாளுமன்ற உணவகத்தில் உணவு உண்ணுவதை தவிர்த்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் 12 கோடி ரூபாவை நாடாளுமன்றம் செலவிடுவதாக நாடாளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலான பணம் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இது தவிர, நாடாளுமன்றத்தின் மின்சார நுகர்வுக்காக ஆண்டுதோறும் சுமார் 10 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

அதில் பெரும்பாலானவை அதன் குளிரூட்டி அமைப்பிற்காக செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வருடாந்தம் தொலைபேசி வசதிகளுக்காக சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவும் குடிநீருக்காக சுமார் ஒரு கோடி ரூபாயும் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற நிதித் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin