ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியது.
மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரயைகள் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் தப்ரிஸ் வீதிகளில் குவிந்துள்ளனர்.
இப்ராஹிம் ரைசியின் பூதவுடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒரு பிரிவினர் இரங்கல் தெரிவிப்பதாகவும், மற்றொரு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் மரணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிடுபவர்களை கைது செய்யுமாறு அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.