பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..!
நால்வர் கைது
வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இரண்டு குற்றவாளிகளால் மனிதப் படுகொலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மீட்டுள்ளது.
திஸாநாயக்க முதியன்சேலாகே அவிஷ்க ஹேஷான் என்ற ‘போதிய வத்தே அவிஷ்க’ மற்றும் அதிகாரிகே சமந்த பெரேரா என்ற ‘சூவ சமந்த’ ஆகிய இரு குற்றவாளிகளினது துப்பாக்கிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இவர்களுடன் இவர்களின் உதவியாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஆயுதம் விநியோகித்தவர், தங்குமிட வசதி அளித்தவர், கொலைகளுக்காக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் மற்றும் ஆயுதங்களைப் பாதுகாத்து வந்தவர் ஆகியோர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3.8 ரக ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, 9 மி.மீ ரக தோட்டாக்கள் 6, 3.8 ரக தோட்டாக்கள் 6, சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 50 கிராம் ஹெரோயின், சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில், கடந்த 30ஆம் திகதி 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில வைத்தியசாலை வீதி, சரணங்கர வீதி, களுபோவில கெவும் வத்தை மற்றும் போதிய வத்தை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தபோதே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் தெஹிவளை, கொஹுவளை மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளில் கொலைகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

