தமிழர்களின் சுயநிர்ணய உரிமை நியாயமானது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு ஈழத் தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோருவது நியாயமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈழத்தமிழர் குறித்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

இந்த உரையாடல் நிகழ்வில் அமெரிக்காவில் வாழும் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் பங்குபற்றியிருந்தனர்.

காங்கிரஸ் தீர்மானம்

காங்கிரஸ் செனட் சபை உறுப்பினர்களின் தீர்மானம் ஈழதமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முற்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் (Wiley Nickel) தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் உள்ள நண்பர்களான ஏனைய உறுப்பினர்களை ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் தான் முன்வைத்த தீர்மானம் தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளானதை அங்கீகரிக்கின்றது என்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் அரசியல் விடுதலையை வலியுறுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்குக் கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு

இத் தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றது. இந்த அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என வில்லே நிக்கல் தெரிவித்தார்.

இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 வருட நினைவேந்தல் வாரத்தில் இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஈழத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

வில்லே நிக்கலஸையும் பாராட்டியுள்ளனர்.

இங்கு உரையாற்றிய வில்லே நிக்கல் மேலும் தெரிவித்தாவது,

இலங்கைத்தீவின் வரலாற்றின் இருள் படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவு கூருகின்றோம். அதேநேரம் எதிர்காலத்தை நோக்கி அனைவரும் சிந்திக்கவும் வேண்டும்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்கான பிரச்சாரங்களை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈழத்தமிழர் விவகாரம் குறித்துக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது.

ஈழத்தமிழர் கதை

அதேவேளை இங்கு உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ், ஈழத் தமிழர்களின் கதை போராட்டக் கதைகளில் ஒன்று எனக் கூறி விமர்சித்தார்.

எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் சுட்டிக்காட்டியதை நினைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

2009 இல் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் நடந்த இன அழிப்புத் துயரம் பற்றியும் பெரும் கவலை வெளியிட்டார் டொம் டேவிஸ்

Recommended For You

About the Author: admin