ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தி , அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட கட்சியின் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு இது தொடர்பிலான வேலைத்திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அண்மையில் நடத்தப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளின் பெயரில் கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட ரணிலுக்கு மிகவும் நெருங்கிய அமைச்சர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் இலக்காக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொது மக்களுக்கு அழுத்தம் தரும் மின்சார சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும், டெலிகொம், இன்சூரன்ஸ், மில்கோ, நிறுவனங்கள் உள்ளிட்ட தேசிய வளங்களின் விற்பனையை நிறுத்தக்கோரியும் மக்கள் மையத்தினால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதில் பல தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பல அமைப்புகள் கலந்து கொண்டன.
“தேசிய வளங்களை விற்பதை நிறுத்து!“ எனும் பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாட்டிற்கு பொருந்தக்கூடிய ஒரு சட்ட அமைப்பை கொண்டு வருவது தொடர்பில் அக்கட்சியின் சட்டத்தரணிகள் சிலர் தற்போது ஆராய்ந்து வருவதாக தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கைகள் வெளியிடப்படும் எனவும் குறித்த கொள்கை அறிக்கைகளை வாசித்து பார்க்குமாறு எதிர்ப்பாளர்களிடம் கோரிக்கையொன்றையும் முன் வைத்துள்ளார்.
லால் காந்த மூலம் கிராமங்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சியிலிருந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முழுவதிலுமாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“எங்களுடைய ஆட்சியின் கீழ் புதிய அரசியலமைப்பு திட்டத்தையும் கொண்டு வருவோம்“ என சட்டத்தரணி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.