டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் முதலாம் திகதி வரை இடைக்கால ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு நிபந்தனைகளின் கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவல ஆவணங்களில் அவர் கையெழுத்திட கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.
கெஜ்ரிவால் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த பின்னர், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஆதரவாளர்களிடையே பெரும் கூட்டத்தில் உரையாற்றினார்.
“நான் திரும்பி வந்துவிட்டேன்,” “உங்கள் அனைவருக்கும் முன்னால் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தேன், இப்போது திரும்பி வந்துவிட்டேன்.”
“உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் அளித்தீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அவர்களால் தான் உங்கள் முன் நிற்கிறேன். சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன்.
இந்த விசாரணைகளின் முடிவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை அமலாக்க இயக்குநரகம் (ED) மார்ச் 21 ஆம் திகதி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.