முக்கிய தொழில்நுட்ப பங்காளியான VFS குளோபல் உள்ளிட்ட வெளிநாட்டு கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுற்றுலாப் பயணிகளுக்கான விசா (Visa) எனப்படும் நுழைவு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை எழும்பியுள்ளது.
இந்த நடவடிக்கை உரிய கேள்வி மனுக் கோரல் (Tender) நடைமுறையை பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து அதிகரித்த கட்டணங்களின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட நாடுகளில் விசா ஆவணங்களை கையாளும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையின் பின்னணியில் சில மறைமுக விடயங்கள் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும் அதனை விரிவாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, இலங்கைக்குக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகளின் தனிபட்ட விபரங்களை வெளிநாட்டு நிறுவனம் வைத்திருப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.