காரில் உலகைச் சுற்றி மலேசியாவின் கலாசாரத்தை பரப்ப முயற்சி

மலேசியாவின் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜேக் வூன் குவெட் ஃபெய் எனும் 47 வயது ஆடவர், தனது பெரோடுவா கெனாரி காரில் தனியாக உலகைச் சுற்றிவரக் கிளம்பியுள்ளார்.

மே 1ஆம் திகதி அவரது பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் நிறைவுற மூன்று ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் 108க்கும் மேலான நாடுகளைக் கடந்து கிட்டத்தட்ட 200,000 கிலோமீட்டர் அவர் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவயது முதலே பரந்து விரிந்த உலகம் முழுவதும் பயணம் செய்யவேண்டும் என்று கனவுகண்டதாகக் வூன் கூறுகிறார்.

தனது பயணத்தின் மூலம் மலேசியாவை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் கலாசாரப் பரிமாற்றத்தின் வாயிலாக ஒற்றுமையையும் நட்பையும் பேணுவதும் இவரது நோக்கங்கள்.

“எனது பயணத்தை ஆவணப்படுத்தி, கற்றல் காணொளிகளை உருவாக்குவேன். மக்களை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்கிறார் வூன்.

இந்தப் பயணத்திற்குக் கிட்டத்தட்ட 860,000 ரிங்கிட் (S$245,600) செலவாகும் என்று இவர் மதிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin