பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் “ஒரு அரசியல் நாடகம்” என மலையக பெருந்தோடடத் தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போராட்டம் என்ற பெயரில் நாடகமாடுவதை விடுத்து, பேச்சுவார்த்தை ஊடாக சம்பளத்தைப் பெற்றுத்தர வேண்டுமென நுவரெலியா, ஹைபொரஸ்ட் தோட்டத்தைச் தொழிலாளர் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பாத) குறிப்பிடுகின்றார்.
“எங்களுக்கு ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவ சம்பளத்தை வாங்கித் தாரதுல அவங்கதான் முக்கியமானவங்க. இப்ப ரொம்ப நாளா இந்த பிரச்சினை போயிட்டுயிருக்கு. கம்பனியோட பேசி ஒரு தீர்வத் தரணும். அத விட்டுட்டு கொழும்புல போராடினா என்ன நடக்க போகுது. இந்த நாடகத்த நம்ப நாங்க தயாரா இல்ல.”
ஆளும் அரசாங்கத்தின் மிக முக்கியமான பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகவும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட தொழிற்சங்கமாகவும் செயற்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்க்கட்சியைப் போல் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
இந்த போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்காமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியிருந்தன.
காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், காங்கிரஸின் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக ஏப்ரல் 21ஆம் திகதி, மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும் நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களின் பலத் தோட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தின் பல நகரங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
எனினும், இவ்வாறு போராட்டங்களை நடத்தியதாலோ, கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டதாலோ என்ன நடந்துவிட்டது என குறித்த தொழிலாளி கேள்வி எழுப்புகின்றார்.
“கொழும்புல போராட்டம் நடத்தினாங்க. எல்லாத் தோட்டங்கள்லயும் கொடிய கட்டினாங்க. நீங்க சொல்லுங்க ஒரு வாரமாச்சு என்ன நடந்துரிச்சி? இதெல்லாம் வரப்போற ஜனாதிபதி எலக்சனுக்காக இவங்க நடத்துறது. ஆயிரம் ரூபாயே எல்லாருக்கும் சரியா கிடைக்கல. இதுல 1,700”
இதேவேளை, இந்த போராட்டமானது “ஒரு கூட்டு நாடகம்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கடந்த 18ஆம் திகதி கண்டி, கலஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
“இ.தொ.காவின் சம்பளப் போராட்டமென்பது கூட்டு நாடகம். இது வெறுமனே கண்துடைப்பிற்காக செய்யப்படுகின்ற போராட்டமாகும்.
அந்த கூட்டு நாடகத்தின் இறுதி நிகழ்ச்சி நிரலே கொழும்பிலே நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் இந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்காக.”
வேலு குமார் கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களின் பின்னர் கடந்த 21ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், இதுத் தெடர்பில் பொலிஸிலில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்திருந்தது.
புஸல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற தன்னை , இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்ததாக வேலு குமார் தெரிவித்திருந்ததோடு, இது குறித்த காணொளிகளும் வெளியாகியிருந்தன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான காங்கிரஸின் இரட்டை முகத்தை தொடர்ச்சியாக விமர்சித்தமையாலேயே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குறிப்பிட்டிருந்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாயை வழங்குமாறு அரசாங்கம் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துடன், அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன், அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இடையில் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபாயை வழங்க முடியாது எனவும், அவ்வாறு வழங்கும் பட்சத்தில் வருடாந்தம் 35 பில்லியன் ரூபாயை மேலதிகமாக செலவிட வேண்டியேற்படுமெனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவிக்கின்றார்.
“தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,700 ரூபாயை வழங்கினால் வருடமொன்றுக்கு 35 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டிவரும்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது. உற்பத்திக்கேற்ப சம்பளத்தை அதிகரித்து வழங்கும் இரு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை நடைமுறைப்படுத்தினால் உற்பத்தியும் அதிகரிக்கும், சம்பளமும் அதிகரிக்கும்.”