“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல் ஆகும். இதனை லாவகமாக கையாள வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் இன்று காலை (14.04.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குமார் பொன்னம்பலம் முதல் சிவாஜிலிங்கம் வரையானவர்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் மக்கள் அளித்த பெறுபேறுகள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, இது குறித்த தீர்மானம் எடுக்கும் போது இந்த சரித்திர பின்னணியும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தென்னிலங்கை இனவாத சக்திகள் மீளவும் நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி செய்யக் கூடும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
“கச்சத்தீவு விவகாரம் ஒரு விவகாரமே அல்ல, அதை தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்தியாவில் ஒரு தரப்பினர் கையில் எடுத்துள்ளனர். அது தேர்தலோடு முடிந்து விடும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.