ஆப்பிரிக்க கண்டத்தில் சீனா அதன் செல்வாக்கை விரிவுபடுத்திவரும் சூழலில் இந்தியாவும் அதன் செல்வாக்கை இங்கு அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.
பல வல்லரசு நாடுகள் அதன் பாதுகாப்பு தளங்களை அமைக்ககும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவரும் பின்புலத்தில் அந்தப் போட்டியில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பட்டுபாதைத் திட்டத்தை பலப்படுத்துவதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் மூலோபாய உறவுகள் மற்றும் இராணுவ இராஜதந்திரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
இதற்கு உலகளாவிய ரீதியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனை முறியடிக்கும் முயற்சிகளின் ஒரு நகர்வாகவே இந்தியாவும் ஆப்பிரிப்பாவில் தமது இராணுவ நகர்வுகளை அதிகரித்துள்ளது.
எத்தியோப்பியா, ஐவரி கோஸ்ட், மொசாம்பிக் மற்றும் சீபூத்தீ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் புதிய பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க புதுடில்லி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியாவின் உறவு சரிவைக் கண்டிருந்தது
இந்த முடிவு ஆப்பிரிக்க கண்டத்துடன் தனது மூலோபாய ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் திட்டமாக உள்ளது என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவால் சூழப்பட்டிருப்பதன் காரணமாக கடல்சார் முக்கியத்துவம் வாய்ந்த சீபூத்தீக்கு இந்தியா தமது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும்.
பல ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே இந்திய இராணுவ தளங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை பெறுவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக PTI கூறியுள்ளது.
ஆபிரிக்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் உறவு சரிவைக் கண்டிருந்தது.
ஆனால், 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் G20 இன் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையிலேயே தமது இராணுவ நகர்வுகளையும் இந்தியா ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருகிறது.