புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தயாராகும் மக்கள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாட இலங்கைத் தீவின் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளைமறுதினம் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள் நகரங்களில் குழுமியுள்ளனர்.

2020ஆம் ஆண்டுமுதல் கொவிட் தொற்று பரவல், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியாத சூழலை எதிர்கொண்டிருந்தனர்.

இம்முறையும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஓரளவு ஸ்திரமான அரசியல் சூழ்நிலை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் இன்றும், நாளையும் அதிகளவான மக்கள் தமது தேவைகளின் நிமித்தம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைத் தீவு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெருநகரங்கள், நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் மக்கள் குழுமும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எவ்வித இடையூறுகளுமின்றி புத்தாண்டை வரவேற்க பாதுகாப்பு தரப்பில் இருந்து வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்,

”உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றன்.

இதனால் எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

7,500 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.” எனவும் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin