இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து, டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடைபெற்ற போதே ராகுல் காந்தி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, ராகுல் காந்தியின் கருத்திற்கு வலுவான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பட்டத்து இளவரசர் ராகுலின் கருத்து ஜனநாயக மொழியில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா? நாட்டை தீக்கிரையாக்க அனுமதிப்பீர்களா? இப்படி சொல்பவர்களை தண்டிக்க மாட்டீர்களா? என மக்கள் மத்தியில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தனது பலவீனத்தை காட்டாமல் இருந்திருந்தால் நமது எல்லையை யாரும் ஏறெடுத்து பார்க்கக்கூட துணிந்திருக்கமாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் காங்ரஸின் பலவீனத்திற்கு சரியான முன்னுதாரணமாக கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்த காங்கிரஸ் கட்சியால் நாட்டை காக்க முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேவேளை, ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் அவசர மனப்பான்மையையும் யாரும் நம்புவதில்லை. அவர்கள் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதே காங்கிரஸின் விருப்பம் என குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் எவ்வளவு எதிர்த்தாலும் அகதிகளுக்கான தனது உத்தரவாதம் தொடரும் எனவும், குருநானக் குருத்வாராவுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை பாஜக கொண்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.