தமிழர் பகுதி கல்முனை பிரதேச செயலகம் பறிக்கப்படுவது ஏன்? சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தீச்சுடர் ஏந்தி, மக்கள் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் கோரிக்கை

01.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் உப அலுவலகமொன்றாக தரம் குறைப்பதற்கான சட்ட விரோத சூழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.

02.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப அலுவலகமொன்றாக கருதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உடனடியாக இரத்துச் செய்யப்படவேண்டும்.

03.கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தனது அதிகாங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரயோகித்து வருவது நிறுத்தப்பட வேண்டும்.

04.1993 ஆம் ஆண்டு ஜூலை மாத 28 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாடு உறுப்படுத்த வேண்டும்.

05.கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைகளை வர்த்தமானிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”. உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் “கல்முனை வடக்கு பிரதேச நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களுக்கான எதிர்ப்பை தெரிவித்து கல்முனை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நிலவி வரும் பிரச்சினைக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களுடைய பிரதேசம் என்பதாலும் சுயமான சுதேசிய தமிழ் மொழியை பேசக்கூடியவர்கள் என்பதால் தான் அந்த பிரதேசத்தை பறிக்க முற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

பாண்டிருப்பு , கல்முனை மற்றும் பெரியநிலாவனை உள்ளிட்ட பல பிரதேசங்கள் தனித்துவமாக இயங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் உள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தலினூடாக இயங்க விடாமல் தடுப்பது மனித உரிமை மீறல் செயற்பாடு” என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய மக்கள் உரிமை போராட்டத்திற்கான தமது ஆதரவையும் இதன்போது அவர் பதிவு செய்தார்.

Recommended For You

About the Author: admin