இலங்கை இராணுவத்திற்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய அல்லது உக்ரைன் இராணுவத்தில் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் இலங்கையிலுள்ள இராணுவத்தினர் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை தகவல் வெளியிட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தூதரகங்கள் ஊடாக இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவத்தினரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு இரு நாடுகளுக்கிடையில் உடன்பாடு எட்டப்படாத பின்னணியில், இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் என இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றுகையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் தகவல் வெளியாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin