மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு டக்ளஸ் தீர்வு

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கான கள பயணத்தினை இன்று மேற்கொண்ட அமைச்சர் நிலைமைகளை ஆராய்ந்தார்.

மேலும், மயிலிட்டி இறங்குதுறைக்கு வருகை தருகின்ற தென்னிலங்கையை சேர்ந்த நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள், துறைமுகத்தில் நாட்கணக்கில் தரித்து நிற்கின்றன.

அதேபோன்று, இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பாரிய இந்திய இழுவைமடிப் படகுகளும் மயிலிடித் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மயிலிட்டிப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தொழில்சார் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே, சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்ந்த அமைச்சர், துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தருகின்ற மீன்பிடிக் கலன்கள் தேவையை நிறைவு செய்ததும், இறங்குதுறை தவிர்ந்த கடல் பகுதியில் தரித்து நிற்பதற்கும், இந்திய இழுவைமடிப் படகுகளை சற்று தள்ளி நங்கூரமிடுவதற்கும் ஏற்ற பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin