இந்திய மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி விமர்சிப்பதற்கு முதலமைச்சருக்கு தகுதி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“அரசியலில் திமுக இருப்பதே அவமானம். விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குகளுக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது.
இதனால்தான் தந்தை பெரியார் திமுகவை கடுமையாக எதிர்த்தார்.
இன்று தனக்கென்று எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். பிரதமர் மோடியை பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை.
தமிழக அரசின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியை தாண்டி இருக்கின்றது. இந்திய அரசியலில் இது போன்ற ஆட்சி இடம்பெற்றதில்லை” என திமுக விற்கு அண்ணாமலை எதிர்ப்பு வெளியிட்டுருந்தார்.
மேலும்,“இந்தியா முழுவதும் 51 சதவீத வாக்குகளை பா.ஜ.க பெறும். கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும்” எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.