நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், சட்டத்தை வரைவும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான இ.தொ.கா தேர்தல்முறை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
அதேபோன்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
தேர்தல் முறை மாற்றத்தை மேற்கொள்ளும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என சிவில் அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க பயப்படுகிறார்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய நாடாளுமன்றத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரொன்டோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் பேசிய அவர், ”அரசாங்கம் ஆட்சியை இழக்கப் போவதாக கருத்துக் கணிப்புகள் கூறுவதால் இந்தத் தருணத்தில் ஒரு தேசியத் தேர்தலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் தேர்தலில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் இப்போது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.
பசில் ராஜபக்ச முயற்சிக்கிறார்
இதனை செயல்படுத்த அரசாங்கத்திற்கு எந்த வாய்ப்பையும் வழங்க மாட்டோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதை செய்ய அனுமதிக்க மாட்டோம்.” எனக் கூறியுள்ளார்.
”ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் குறைந்த பட்சம் சில நாடாளுமன்ற ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள முடியாது அரசாங்கம் கருதுவதால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்சவும் அவரது குழுவினரும் தற்போது முயற்சித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் பிரகாரம், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.