இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிக்க முனைவதால் தொடரும் மோசடிகள் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு தனிநபர்கள் இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
தற்போது, சமூக ஊடக தொடர்பாடல் தளங்கள் மூலம் பல குற்றச்செயல்கள் இடம்பெறுவதுடன், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணம் செலவிடுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அண்மையில் சில போட்டி நிகழ்வுகளுக்கு வாக்களிக்குமாறு கோரி நண்பர் கோரிக்கைகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்ட பல சம்பவங்கள் பேஸ்புக் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அனுப்பிவைக்கப்படும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய சடவுச்சொல்லை (OTP) எந்தவொரு நபருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அடையாளம் காணமுடியாத தரப்பினர் பல்வேறு குற்றச்செயல்களுக்காக வாங்கிக் கணக்குகளை ஆரம்பித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய நபர்களின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதி பாத்திரங்களை பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதால் பெரும்பாலான வழக்குகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சாருக தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.