பிரபல ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
66 வயதான அவர் தற்போது குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
“சமீபத்தில் சத்குரு அவர்கள் உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைக்கு ஆளானார் எனவும் தற்போது அவர் நலமுடன் உள்ளார்” என்று ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடுமையான தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சத்குருவுக்கு மூளையில் பலமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததால், மார்ச் 17 அன்று இந்திரபிரஸ்தா அப்பல்லோ வைத்தியசாலையில் அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த நான்கு வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மார்ச் 14 ஆம் திகதி டில்லிக்கு வந்தபோது தலைவலி மிகவும் கடுமையானது.
குறித்த நாளில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக”அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் பின்னர் அவரின் உடல் நிலை மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.