நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய வாங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 வீதம் மாத்திரமே அதிகரிக்கும் என கணிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் எதிர்பார்த்ததை விட மோசமான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்த மதிப்பீடானது பிரான்ஸின் பொருளாதரம், நிதி, தொழிற்துறை மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் உறுதியளித்த 1 வீத வளர்ச்சியை விட குறிப்பிடத்தக்க வகையில் குறைவாகவே காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஆண்டின் முதற்பகுதியில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முன்னறிவிப்பை மாற்றியமைப்பதற்கான கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 1.4 வீதம் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வருமானம் திட்டமிட்ட அளவை விட 4.4 பில்லியன் யூரோக்கள் குறைவாக காணப்பட்டதனை பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லு மேர் (Bruno Le Maire) ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், வரவு-செலவுத் திட்ட குற்றாக்குறையின் அளவு கணிசமானளவு அதிகமாக இருப்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தப் பின்னணியில், அமைச்சுக்களின் செலவுகளை 10 பில்லியன் யூரோக்களால் குறைக்கும் திட்டத்தை செயற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, நாடாளுமனற குழுவில் நடந்த விசாரணையில், பொதுக் கணக்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் 20 பில்லியன் யூரோக்களைச் சேமிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பிரான்ஸில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நுகர்வோர் விலைகளின் சராசரி ஆண்டு வளர்ச்சி 4.9 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.