ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் ரணில்

இலங்கைத் தீவின் அரசியலில் கடந்த நான்கு தசாப்தங்களாக தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

1977ஆம் ஆண்டு முதல் பிரதமர் உட்பட பல அமைச்சுப் பதவிகளை ரணில் விக்ரமசிங்க வகித்த போதும் ஜனாதிபதி பதவி மாத்திரம் அவருக்கு எட்டாக்கணியாக இருந்தது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததால் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார்.

என்றாலும், அது மக்களின் விருப்பதுடன் இடம்பெற்ற நிகழ்வு அல்ல. மக்களின் கடுமையான எதிர்பால் பொதுஜன பெரமுனவால் ஜனாதிபதியாக்கப்பட்ட நபரே ரணில்.

2000ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டு என இரண்டுமுறை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டு சந்திரிகா மற்றும் மஹிந்தவிடம் தோல்வியடைந்தவரே ரணில்.

மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வந்தர் ரணில்

இலங்கை வரலாற்றில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும். இத்தகைய பின்னணியை கொண்டுள்ள ரணில், இம்முறை மக்கள் விருப்பத்துடன், அரியாசனத்தில் அமர பார்க்கிறார்.

கோட்டாபய ராஜபக்சவால் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கைத் தீவில் பொருளாதார நெருக்கடியை தணித்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வந்தர் என்ற விம்பத்தையும் உருவாக்கியுள்ளார் ரணில்.

இதுதான் அவரது தேர்தல் பிரசாரமாகவும் இருக்கப் போகிறது. ஆளுங்கட்சியின் முழுமையான ஆதரவை அதற்காக எதிர்பார்க்கிறார் ரணில்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகமாகும் ரணில்

என்றாலும், ஆளுங்கட்சிக்குள் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் நாமல் ராஜபக்ச உட்பட பலருக்கு இல்லை என்பதுதான் அவர்களது அண்மைக்கால ஊடக அறிவிப்புகள் காட்டுகின்றன.

பசில் ராஜபக்சவும் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான முறுகல்கள் ஆளுங்கட்சிக்குள் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

அதனால் ஆட்டத்தில் முந்திக்கொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் ஈடுபட்டுள்ளார். குளியாப்பிட்டியில் எதிர்வரும் 10ஆம் திகதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் ரணில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, தெரிவானதன் பின் கலந்துகொள்ளும் முதல் பொதுக் கூட்டமாகவும் இது அமைய உள்ளது. இதன்போது, ஐ.தே.கவின் வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார்கள் எனத் தெரிய வருகிறது.

வெற்றியளிக்குமா ஐ.தே.கவின் கணிப்பு

ஆளுங்கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரணிலின் முயற்சியாகவே இந்த நகர்வு இடம்பெறுவதாக ஐ.தே.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர பல அமைச்சர்கள் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

ஆளுங்கட்சிக்குள் எதிர்ப்பை வெளியிடும் ஏனையவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்காக பொது மக்கள் மத்தியில் தம்மை ஜனாதிபதி வேட்பாளராக பிரபல்யப்படுத்த ரணில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

குளியாட்பிட்டிய பொதுக் கூட்டத்தின் பின்னர் ஆளுங்கட்சிக்குள் உள்ள ஆதரவு வளையம் மற்றும் மக்கள் மத்தியிலான பிரபல்யத்தை வைத்து இந்த நகர்வில் ரணில் வெற்றி காண்பார் என்பது ஐ.தே.கவின் கணிப்பு.

பொதுத் தேர்தலை விரும்பும் பொதுஜன பெரமுன

இதேவேளை, பொதுத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பசில் ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது, பொதுத் தேர்தல் குறித்து சூட்சமான கருத்தொன்றையும் வெளியிட்டிருந்தார்.

மஹிந்த மற்றும் பசிலின் நெருங்கிய விசுவாசியான உதயங்க வீரதுங்க, புத்தாண்டுக்கு பின்னர் பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள போட்டி அரசியல் பல்வேறு அரசியல் நெருக்கடிகளை வரும் நாட்களில் இலங்கைத் தீவில் உருவாக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin